பெண்ணொளி – திருமதி. ச. அனுராதா

கண்ணின் ஒளி கருவிழி அதுப்போல குடும்பத்தின் ஒளி பெண். ஒரு பெண் பிறந்தது முதல் மகளாக சகோதரியாக மனைவியாக தாயாக பல விதமாக உருவெடுக்கிறாள். ஒரு நதி போல ஓரிடத்தில் உருவெடுத்து தான் செல்லும் வழியெல்லாம் செழுமையாக்கி கடலில் கலப்பது போல பெண்ணும் ஓரிடத்தில் பிறந்து வளர்ந்து குலம் தழைக்கச் செய்கிறாள். எனவே தான் பெண்ணை “வீட்டின் குலவிளக்கு" என்கிறார்கள்.

சாதனையின் பிறப்பிடம் :

பெண்களின் காலடி படாத இடமே இல்லை எனும் அளவிற்கு பெண்கள் ஆணுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் தடம்பதித்து வருகின்றனர். அறிவை வளர்க்கும் புனித இடமான கல்விக்கூடங்களில் பெரும்பான்மையினர் பெண்கள்தான் ஏனெனில் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவர்களின் இயல்பு குணமாகும்..

இன்னும் பிற துறைகளில் பெண்களின் பங்களிப்பும் வெற்றியும் அபாரம், செவிலியர், மருத்துவர். விமானப்படை என எல்லாத் துறைகளிலும் மக்களுக்கு சேவை செய்ய சிரித்த முகத்துடன் வலம் வருவதில் பெண்களுக்கு அதிக பங்குண்டு.

பெண்கள் அதீத பார்வைத்திறன் கொண்டவர்கள். எந்த ஒரு கூட்டத்திலும் தெரிந்தவர், ஒருவர் இருந்தால் கூட இவர்களது கண்களுக்கு சட்டென்று புலப்படும் அது மட்டுமின்றி கிரகிக்கும் திறன் அதிகம் கொண்டவர் பெண்களே அதனால் தான் எல்லா இடங்களிலும் பெண்கள் திறம்பட செயல்பட்டு வெற்றியும் பெறுகின்றனர்.

பெண் கல்வி :

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு
மாடல்ல மற்றவை யவை.

என்ற திருக்குறளுக்கு இணங்க ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியாகும், மற்ற செல்வங்கள் எல்லாம் அழியக் கூடியவை. ஆகவே அழியாத கல்வி செல்வத்தை பெண் குழந்தைக்கு கொடுப்பது பெற்றோர் ஒவ்வொருவரின் கடமையாகும்.

ஏனெனில் நம் பெண் குழந்தைகள் சேவையில் ஒரு அன்னை தெரசாகவோ, அறிவியலில் ஒரு கல்பனா சாவ்லாவாகவோ, ஆன்மீகத்தில் ஒரு சாரதாவாகவோ, மருத்துவத்தில் ஒரு சரோஜினி நாயுடுவாகவோ, விளையாட்டில் ஒரு பி.டி. உஷாவாகவோ, இலக்கியத்தில் ஒரு ஓளவையாராகவோ திகழலாம். எனவே அவர்களை போற்றி பாதுகாப்பது பெற்றோரின் கடமையாகும்.

முடிவுரை:

பெண் கோவில் கருவறையில் செல்வதில்லை ஏனெனில் அவளுக்குள்ளே கருவறை ஒன்றிருக்க மற்றொன்று ஏன்?. இப்படிபட்ட பெருமை கொண்ட பெண்ணே உன் இளமையான தோற்றத்தை பராமரிப்பதிலும், தொலைக்காட்சி, கைப்பேசி போன்ற நவீன பொழுது போக்கிலும், உன்னை மனதளவில் பலவீனப் படுத்தும் புகழாரத்திலும் மயங்காது, “நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிவும் என மனதில் உறுதியாக கொண்டு எடுத்த எல்லாக் காரியத்திலும் வெற்றி பெறுவாய், என் பாரதி கண்ட புதுமைப் பெண்ணே!

வாழ்க தாய் நாடு! வளர்க பெண்ணியம் !
பெண்ணொளி பரவட்டும் ……………….

திருமதி. ச. அனுராதா, ஆத்ம யோகா (+91 – 72995 55131)